ஏனைய கட்சிகளுடன் இணைந்து பயணிப்பதானது தற்போதைய காலத்தின் கட்டாயமாக உணரப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியதன் பினனர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இணைந்த வடக்கு கிழக்கு பிராந்திய ரீதியாக செயல்படும் மிகப்பெரும் பேரியக்கமாக எமது தமிழரசுக் கட்சி காணப்படுகிறது.
தமிழரசுக் கட்சியினுடைய காலச் சூழலில் அது புதிய தலைவர்களை அறிமுகம் செய்திருக்கிறது.
தலைவர்களை இயற்கையும் காலமும் கொண்டு வருகின்றது. ஆகவே இது ஒரு விவேகமான ஒரு உள்ளக தேர்தலாக காணப்படுகிறது.
எனது ஆளுமைக்கும் எனக்குள்ள ஆற்றலுக்கும் ஏற்றார் போல் ஏனைய எல்லோரையும் கூட்டாக அரவணைத்து தமிழரசுக் கட்சியை கட்டி வளர்ப்பதோடு ஏனைய கட்சிகளோடும் நல்லுறவைப் பேணி தமிழ் தேசிய விடுதலைக்காக பயணத்தை முன்னெடுப்போம்.
ஏனைய கட்சிகளுடன் இணைந்து பயணிப்பதானது தற்போதைய காலத்தின் கட்டாயமாக உணரப்படுகிறது.
நாங்கள் அதனை நிராகரிக்கவில்லை. அது தமிழ் மக்களுக்கான தேவையாக இருக்கிறது.
அந்த ஒற்றுமைக்காக என்னென்ன விட்டுக்கொடுப்புகளை செய்ய முடியுமோ, என்ன விடயங்களில் சேர்ந்து செயற்படுவது என்பது தொடர்பிலும் கதைத்து அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.