தேர்தல் என்று வந்தால் கட்சி அரசியலில் ஜனநாயக பண்பு அதிகரிக்கும். கட்சிகள் தங்களுடைய கீழ்மட்ட, மேல்மட்டக் கட்டமைப்புகளைச் சீர் செய்து, மக்களை நோக்கிச் செல்லும். குருட்டு விசுவாசமும் சாதியும் சமயமும் அதில் செல்வாக்கு செலுத்தும் என்பது உண்மைதான்.என்றாலும் வாக்காளர்களில் தங்கியிருக்கும் ஒரு போக்கு எனப்படுவது, கட்சி அரசியலைப் பொறுத்தவரை ஜனநாயகமானது. அந்த வாக்காளர்கள் விமர்சன பூர்வமாகச் சிந்திக்கும் வாக்காளர்களா இல்லையா என்பதுதான் இங்குள்ள பிரதான கேள்வி.
தமிழரசுக் கட்சிக்குள் தலைமைப் பீடத்துக்கான தேர்தல் எனப்படுவது அவ்வாறு கட்சியை ஒப்பீட்டளவில் ஜனநாயக மயப்படுத்துவதாகத் தெரிகிறது.மூன்று வேட்பாளர்களும் தமது ஆதரவைத் திரட்டுவதற்காக களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.அதிலும் முக்கியமாக இரண்டு பிரதான வேட்பாளர்களும் தங்களுடைய பகைவர்களை எப்படி நண்பர்கள் ஆக்கலாம் என்று சிந்தித்து உழைக்கின்றார்கள்.
இந்தப் போட்டியில் முதலிலேயே குதித்தவர் சுமந்திரன்தான். அவர் தன்னுடன் விரோதமாக இருந்தவர்கள் தன்னுடன் முரண்பட்டு கட்சியை விட்டு வெளியேறியவர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் அரவணைக்கத் தொடங்கினார்.தன்னை விமர்சித்து எழுதும் விமர்சகர்கள் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் போன்றோரை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சந்திக்கத் தொடங்கி விட்டார்.இரவு விருந்துகளுடன் நடக்கும் சந்திப்புகளின் போது சுமந்திரன் ஒப்பீட்டளவில் வெளிப்படையாக உரையாடுவார்.அது ஒரு தொழிற்சார் மிதவாத அரசியல்வாதிக்குரிய பிரதான பண்பு பலம்.
அவரை கட்சிக்குள் வந்த வழிப்போக்கர் என்று விமர்சித்த மன்னாரைச் சேர்ந்த சிவகரனை அவர் தேடிச் சென்று சந்திக்கின்றார். சிவகரனுக்கு ஒரு வழக்கு என்றதும் சுமந்திரன் தானாக அதில் தோன்றுகிறார்.அப்படித்தான் தன்னை அழைக்காமலேயே தன்னார்வமாக வழக்குகளில் தோன்றியிருக்கிறார். மேலும் அனந்தி போன்ற கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பலரையும் அவர் இப்பொழுது அரவணைத்து வருகிறார்.அதாவது தன்னுடைய பகைவரின் எண்ணிக்கையைக் குறைத்து ஆதரவாளர்களின் எண்ணிக்கையை அவர் பெருக்கி வருகிறார் என்று பொருள்.
அதையே சிறீதரனும் செய்கின்றார்.சுமந்திரனைப் போலவே சிறீதரனுக்கும் வாய் கூடாது. இருவருமே தமது சொந்த இயல்பினால்தான் அதிகம் பகைவரைச் சம்பாதித்துக் கொண்டார்கள். கொள்கை வேறுபாடுகளை அல்லது தனிப்பட்ட முரண்பாடுகளை வெளிப்படுத்தும் விதத்தில் இருவரிடமும் ஒரே இயல்பு இருந்தது.ஆனால் இப்பொழுது இருவரும் அதனைச் சரி செய்யத் தொடங்கி விட்டார்கள். சிறீதரன் முன்பு கூட்டமைப்பு இயங்கிய காலகட்டத்தில் பங்காளிக் கட்சிகளாக இருந்தவற்றின் தலைவர்களை இப்பொழுது வழமையைவிட அதிகமாக மதிப்பதைக் காண முடிகிறது. அவருடைய நேர்காணல்களில் “செல்வம் அண்ணர்”,”சித்தார்த்தன் அண்ணர்” என்றெல்லாம் அவர் விழிக்கத் தொடங்கி விட்டார். கூட்டமைப்புக்குள் மேற்படி பங்காளி கட்சிகளுக்குரிய இடம் தரப்பட்டிருக்க வேண்டும் என்றும் இப்பொழுது கருத்து தெரிவித்து வருகிறார். சிலசமயம் தேர்தலில் தோற்றால், புதிய கூட்டு ஒன்றை நோக்கி அவர் சிந்திக்கிறாரோ தெரியவில்லை.
ஆனால் தனக்குப் பகைவர்களாக இருந்தவர்கள் அல்லது தன்னை விட்டுத் தூர விலகி நின்றவர்களை,அவர் இப்பொழுது அதிகமாக அரவணைக்க தொடங்குகிறார். மேலும் சுமந்திரனை அன்ரன் பாலசிங்கம் என்று அழைத்ததற்கு பிராயச்சித்தம் தேடி பாலசிங்கம் நினைவுப் பேருரை என்ற ஓர் அரங்கை ஏற்பாடு செய்திருக்கிறார்.அதில் பல்கலைக்கழக பேராசிரியர்களை பேச அழைத்திருக்கிறார்.கிழக்கிலிருந்தும் கட்சி முக்கியஸ்தர்களை அழைத்திருக்கிறார்.
இவ்வாறாக இரண்டு பிரதான போட்டியாளர்களும் தங்களுடைய ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்தும் நோக்கத்தோடு இறங்கி வருகிறார்கள்;இறங்கி வேலை செய்கின்றார்கள்.அது ஒரு நல்ல அம்சம். தமது குணாதிசயங்களில் இருக்கக்கூடிய எதிர்மறை அம்சங்களைக் கண்டுபிடித்து அவற்றை நிவர்த்தி செய்ய முற்படுவது. அது தேர்தல் தேவைக்கு மட்டுமாக இல்லாமல் என்றென்றைக்குமானதாக இருந்தால்,அது தமிழரசுக் கட்சியின் அக ஜனநாயகத்தை மேலும் செழிப்பாக்கும். எனினும் தேர்தல் முடிவுகள் கட்சியை மேலும் பாரதூரமான விதங்களில் சிதைத்து விடுமா என்ற எதிர்பார்ப்பு பரவலாக உண்டு.
கட்சி ஏற்கனவே சிதைந்து விட்டது.அதற்கு சம்பந்தர் சுமந்திரன் மாவை உட்பட எல்லா மூத்த தலைவர்களும் கூட்டுப் பொறுப்பை ஏற்க வேண்டும். முதலாவதாக முது தலைவராக சம்பந்தர் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.கட்சியை கொழுப்பை நோக்கித் திருப்பி, புலி நீக்கம் செய்து, ஆயுதப் போராட்ட நீக்கம் செய்து, ஒரு தூய மிதவாதக் கட்சியாக மீளக் கட்டியெழுப்பும் வழியில் செலுத்த முற்பட்டார்.அதன் விளைவாகத்தான் கட்சி சிதையத் தொடங்கியது.
அதற்கு மாவையும் பொறுப்பு. ஒரு கட்சித் தலைவர் என்று அடிப்படையில் கட்சி அதன் பாரம்பரியத் தளத்தில் இருந்து விலகிச் செல்வதை அவர் தடுக்கவில்லை. அல்லது தடுக்க முடியவில்லை. தடுக்க முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்து விட்டு,கௌரவமாக வெளியேறி இருந்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும்,முதிய வயதிலும் பதவி வேண்டும் என்று ஆசைப்பட்டதன் விளைவாக அவர் தன்னையும் தாழ்த்திக் கொண்டார்; கட்சியையும் சிதைய விட்டார். சிவகரன் 2013 ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜாவை சுமந்திரன் பியோன் என்று அழைத்திருந்தார். கட்சியின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கயற்கரசி அவர்கள் கூறியது போல, தமிழரசுக் கட்சியின் சவப்பெட்டிக்கு கடைசி ஆணியை தைத்தது மாவைதானா ?
சுமந்திரன் சம்பந்தரின் கருவியாகத்தான் கட்சிக்குள் இறக்கப்பட்டார்.கட்சியை கொழுப்பை நோக்கி திருப்புவதற்கும் புலி நீக்கம் தீவிரவாத நீக்கம் செய்வதற்கும் சம்பந்தருக்கு ஒரு புதிய ஆள் தேவைப்பட்டது.அப்படி நினைத்துத் தான் விக்னேஸ்வரனையும் உள்ளே கொண்டு வந்தார். ஆனால் விக்னேஸ்வரன் பூமராங் ஆக மாறினார்.ஆனால் சுமந்திரன் சம்பந்தர் நினைத்ததைப் பெருமளவுக்குச் செய்து முடித்திருக்கிறார்.கட்சிக்குள் ஏகமனதாக ஒரு தலைவரைத் தேர்வு செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் இப்போக்கின் வளர்ச்சிகள்தான்.
தமிழரசுக் கட்சியை பொதுவாக யாழ்ப்பாணத்தின் செம்பாட்டுப் பண்பு அதிகமுடைய கட்சி என்று கூறுவார்கள்.செம்மண் பிரதேசத்தில் வசிக்கும் செம்பாட்டு யாழ்ப்பாணத்தவர்களின் மத்தியில் அதற்குப் பலமான ஆதரவுத் தளம் இருந்தது.கட்சியின் செம்பாட்டுப் பண்பை தமிழ் தேசிய எதிர்ப்பு அரசியல் பண்பை நீக்கி அதை அதிகம் கொழும்பு மையமாகத் திருப்ப சம்மந்தர் முயற்சித்தார்.அதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அவர் முன்னேறினார். அதன் விளைவாகத்தான் சுமந்திரன் எழுச்சி பெற்றார்.
எனினும் கட்சியின் பிரதான பலமாக காணப்படும் எதிர்ப்பு அரசியல் பண்பை முற்றாக நீக்க முடியவில்லை. அது கட்சியின் வேரிலேயே இருந்தது. அதன் விளைவாகத்தான் இப்பொழுது எதிர்ப்பு அரசியல் பண்புக்கும் கொழும்பு மைய இணக்க அரசியல் பண்புக்கும் இடையிலான ஒரு மோதல் மேலெழுந்துள்ளது.
எனவே கட்சியைச் சிதைத்தமைக்கு சம்பந்தர், சுமந்திரன், மாவை ஆகிய மூவரும் முதலில் பொறுப்பு.அதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த எல்லா மூத்த தலைவர்களும் அதற்குப் பொறுப்பு.கட்சிக்குள் இருந்து வினைத்திறன் மிக்கவர்கள் வெளியேற்றப்பட்ட பொழுது அவர்கள் அதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.சிவகரன், அனந்தி, பேராசிரியர் சிற்றம்பலம் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் வெளியேறினார்கள்.2015ல் தான் அவ்வாறு தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் அதிகமாக வெளியேறினார்கள்.
அவ்வாறு ஆயுதப்போராட்டம் மரபில் வந்தவர்களையும் தீவிர தமிழ் தேசிய எதிர்ப்பு அரசியல் நோக்குநிலை கொண்டவர்களையும் செம்பாட்டு இயல்பை பிரதிபலித்தவர்களையும் கட்சியிலிருந்து நீக்க முற்பட்டதன் விளைவாக, ஒருபுறம் கட்சி பலவீனமடைந்தது. ஆனால் அவ்வாறு நீக்க முற்பட்ட போதிலும் அதில் முழு வெற்றி பெற முடியவில்லை என்பதன் விளைவாக இப்பொழுது இரு வேறு போக்குக்கும் இடையிலான ஒரு மோதல் தோன்றியிருக்கிறது.
அனந்தி சிவகரன் போலன்றி சிறீதனுக்கு வாக்குப் பலம் உண்டு. அதனால்தான் அவர் சுமந்திரனுக்குச் சவாலாக எழுந்தார்.அந்த வாக்குப் பலமானது பிரதேச ரீதியிலானது; தீவுகளை அடிப்படையாகக் கொண்டது வன்னியை அடிப்படையாகக் கொண்டது;இரணைமடு நீரை அடிப்படையாகக் கொண்டது ஆயுதப் போராட்டப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த அடிப்படையில் கட்சியை கொழும்பை நோக்கித் திருப்ப எடுத்த முயற்சிக்கும் அதற்கு எதிரான பண்புகளுக்கும் இடையிலான மோதலாகவே தலைமைத்துவப் போட்டி தோன்றியிருக்கிறது. இந்த மோதலில் யார் வெல்கிறார்கள் என்பதை பொறுத்து கட்சியில் எந்த இயல்பு அதிகம் மேலோங்கி இருக்கிறது என்பதனை கண்டுபிடிக்கலாம்.
தனது கண்ணுக்கு முன்னாலேயே தன்னுடைய கட்சி சிதைவதைத் தடுக்க முடியாத கையாலாகாத ஒரு தலைவராக சம்பந்தர் மாறிவிட்டாரா? அதற்கு பிராயச்சித்தம் செய்ய அவரால் முடியும்.அதற்குரிய உடற்தெம்பும் மனத் தெம்பும் அவருக்கு இருந்தால்,அதை அவர் செய்யலாம். தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சியின் சிதைவைத் தடுப்பது என்று சொன்னால் சம்பந்தரும் மாவையும் சேர்ந்து,மூத்த தலைவர்களைக் கலந்தாலோசித்து, நடக்கவிருக்கும் தேர்தலை ஒத்திவைக்கலாம்.அல்லது போட்டியாளர்களை ஒதுங்க வைத்து ஒரு மூத்த, பொதுவான ஆளைத் தலைவர் ஆக்கலாம்.அப்படிச் செய்வதென்றால் கட்சியின் மீது சம்பந்தரின் பிடி இறுக்கமாக இருக்க வேண்டும். ஆனால்,அண்மையில் சம்பந்தர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், திருக்கோணமலையில் கட்சியின் வெவ்வேறு மட்டக் குழுக்களில் தன்னுடைய ஆட்கள் உள்ளீர்க்கப்படவில்லை என்று ஒரு முறைப்பாட்டை செய்திருந்தார். அதாவது வட்டாரக் குழுவுக்குள்கூட தனக்கு விசுவாசமானவர்களை இணைக்க முடியாத அளவுக்கு ஒரு பலவீனமான தலைவராக அவர் மாறிவிட்டார் என்று பொருள். அப்படிப்பட்ட ஒருவரால் தேர்தலை தடுத்து நிறுத்த முடியுமா?
இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல,உட்கட்சித் தேர்தல் எனப்படுவது உட்கட்சி ஜனநாயகத்தைச் செழிப்பாக்கும். ஆனால் அதன் விளைவு சில சமயம் கட்சியை இரண்டாக்கக்கூடும். அதாவது எது கட்சியின் ஜனநாயக ஆன்மாவை பாதுகாக்குமோ அதுவே கட்சியை இரண்டாக்ககூடும் என்பது எதைக் காட்டுகிறது? தமிழரசியலின் தோல்வியையா?