போதைப்பொருட்களுடன் கைது செய்யப்படுவர்களுக்கு பிணை வழங்கப்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது நாட்டின் நீதிமன்றங்களில் 13 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்காக உள்ளன.
தற்போது 14 இலட்சத்தை இது நெறுங்கியுள்ளது.
இந்த வழக்கு விசாரணைகள் தாமதமடைவதால், அந்த வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்னும் பல குற்றங்கில் ஈடுபடுவார்கள்.
தற்போதைய அரசாங்கம், ஐஸ். அஷிஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்படுவர்களுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறைச்சாலைகளில் இடவசதி இல்லாதமையே இதற்கான காரணமாகும். இது உண்மையில் வேடிக்கையான விடயமாகும்.
இந்த நாட்டில் போதியளவு இடவசதி உள்ளது. இராணுவம் நினைத்தால் ஒரே மாதத்தில் அங்கு புனர்வாழ்வு நிலையங்களை அமைக்க முடியும்.
நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை துரிதமாக முடிக்க வேண்டும். சில வழங்குகள் 20 வருடங்கள் நடக்கின்றன.
இன்னும் சில வருடங்கள், 3 தலைமுறைகளாகக்கூட நடந்து வருகின்றன. குறைந்தது 6 மாதங்களில் ஏனும் வழங்குகளை முடிப்பதற்கான சட்டங்களை நாடாளுமன்றில் கொண்டுவர வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.