மொட்டு மாபியாவின் கைப்பாவையாகவே தற்போதைய ஜனாதிபதி செயலாற்றுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹேவாஹெட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ராஜபக்சவிற்கு சொந்தமான மொட்டு மாபியாவின் கைப்பாவையாகவே தற்போதைய ஜனாதிபதி செயலாற்றுகிறார்.
இந்நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்களுக்கு எதிராக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து குற்றம் சாட்டப்பட்டவர்களது பிரஜா உரிமைகளை இல்லாதொழிப்பதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லையென ஜனாதிபதியிடம் வினவிய போது அவர் அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டார்.
மொட்டு கட்சியின் மாபியா மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமையே இதற்கு காரணம்
மொட்டு கட்சியின் 134 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் வந்த ரணில், நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களை பாதுகாத்து வருகிறார்.
இன்று ஒரு கைப்பாவை ஜனாதிபதியே ஆட்சியில் இருக்கிறார். இந்த கைப்பாவையின் அதிகாரங்கள் ராஜபக்சர்களின் கைகளிலேயே உள்ளன” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.