மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் அமைதியான வழியில் போராடிய மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி நிற்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தினை கரிநாளாக அறிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் பலர் தாக்கப்பட்டமை குறித்து கொழும்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் தெரிவித்தார்.
மேலும் தமிழர் தாயகத்தின் பல பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் பலர் தாக்கப்பட்டும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டும் அரசாங்கம் தனது அராஜகத்தை வெளிப்படுத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு நிதியுதவி வழங்குகின்ற சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் இலங்கை அரசாங்கத்தினது ஜனநாயகத்தின் குரலை நசுக்கும் செயற்பாடுகளை அவதானித்துச் செயற்பட வேண்டுமெனவும் சட்டத்தரணி சுகாஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.