சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை அதன் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதி ஐ.எம்.எப் பிரதிநிதிகளுடன் நேரடியாக கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்க்க ட்சிகளின் தலைவர்களான சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு நாடாளுமன்ற நிதிக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் அதன் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அண்மையில் ஹர்ஷ டி சில்வா கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்த்தக்கது.
அத்துடன் நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல
ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.மஹிந்த சிறிவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.