தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட தீர்மானங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு இன்று பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 8ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் சபை சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கூடியது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டதுடன், அதன் பொதுச் செயலாளரின் விடயங்களில் செயற்படும் அதிகாரம் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க அந்த தீர்மானங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்ததுடன் அது தொடர்பான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டன.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபாலவும் கடந்த நாட்களில் தமது கட்சியால் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் உரிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென மித்ரபால தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்சிகள் முன்வைக்கும் விடயங்கள் தொடர்பில் இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.