ஹட்டன், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்று மாயமான 17 வயதுடைய மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காசல்ரீ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே குறித்த நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற நிலையில், நேற்று நீரில் மூழ்கி காணாமற் போயிருந்தார்.
நேற்று பிற்பகல் 3.30 மணி அளவிலேயே அவர் காணாமற் போயிருந்தார். இதனையடுத்து காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மாணவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து, குறித்த மாணவனின் உடல் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் மாணவன் நீந்திக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.