மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் கொழும்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தையடுத்து, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, மாத்தளை உள்ளிட்ட பகுதிகளிலும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மருதபாண்டி ராமேஷ்வரன் மேலும் தெரிவித்துள்ளதாவது” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீவிர முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றது. சம்பள நிர்ணயசபை மற்றும் தொழில் அமைச்சு ஊடாக கம்பனிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுவருகின்றது.
எதிர்வரும் 24 ஆம் திகதி சம்பள நிர்ணயசபை கூடவுள்ளது. இதன்போது சாதகமான முடிவு கிட்டும் என நம்புகின்றோம். இதற்கிடையில் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் போராட்டங்களையும் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வென்றெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் ஒன்றுபட வேண்டும்.
தொழிலாளர்களும் இதனையே எதிர்பார்க்கின்றனர். ஆனால் ஒரு சிலர் அரசியல் நோக்கில் விதாண்டாவாத விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமது இயலாமையை மூடிமறைத்துக்கொள்வதற்காக காங்கிரஸ்மீது வசைபாடி வருகின்றனர்.
தொழிலாளர்களின் நலன்கருதியே காங்கிரஸ் அனைவரையும் அரவணைத்துக்கொண்டு தொழிற்சங்க சமரை முன்னெடுக்க எதிர்பார்க்கின்றது.
எனவே, உதவி வழங்காவிட்டாலும், காலைவாராமல் இருக்கும் வகையில் செயற்பட வேண்டும். தேர்தல் காலத்தில் அரசியல் செய்யலாம். சம்பள விடயத்தில் அரசியலை திணிக்க வேண்டாம்” இவ்வாறு மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.