இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியாக தேர்தல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தமிழகத்தில் வாக்குப்பதிவானது மிகவும் மந்தமான நிலையில் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நேற்று ஆரம்பமாகி ஜூன் 1 ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் திகதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, நாடு முழுவதும் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
தமிழ்நாடு, அருணாச்சலபிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கார், மத்தியபிரதேசம், மராட்டியம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்காளம், அந்தமான் – நிகோபார், காஷ்மீர், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி என 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.