”ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்படும் அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்” என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுகின்றது. தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்படவில்லை. தேர்தலில் எந்தத் தரப்பினருடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக இதுவரை தீர்மானிக்கவில்லை.
நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் சேவை செய்யும் ஒருவருக்கு ஆதரவு வழங்க வேண்டும். பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பது மற்றும் வாழ்க்கை செலவு அதிகரிப்பினை நிவர்த்தி செய்யும் அரசாங்கம் ஒன்றே மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் முன்னிலையாவதற்கு தயாராகவுள்ள எந்தவொரு கட்சிகளிடமும் சிறந்த பொருளாதார திட்டம் கிடையாது.
நாட்டை தாரைவார்க்காத மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒருவருக்கே நாம் தேர்தலில் ஆதரவு வழங்குவோம்.
தேசிய மக்கள் சக்தியை பொருத்தவரை அதிகளவான மக்களை ஒன்றிணைத்து பிரசாரக்கூட்டங்களை நடத்தியிருந்த ஒரு கட்சியாகும்.
ஆனால் தேர்தலில் அவர்களுக்கு நூற்றுக்கு 3 வீத வாக்குகளே கிடைத்தன. ஊழல்மோசடிகளுக்கு எதிராக செயற்படும் அரசாங்கம் ஒன்றையே மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.