இந்தியாவின் சேலம் மாவட்டத்தில், சுற்றுலாத் தலமான ஏற்காட்டில், தனியார் பஸ்ஸொன்று 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
60 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏற்காடு பஸ் நிலையத்திலிருந்து, மலைப்பாதை வழியூடாக சேலத்துக்கு பயணித்த பஸ்ஸொன்றே இவ்வாறு நேற்று(30) மாலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
குறித்த பஸ் மலைப்பாதையின் வளைவில் திரும்பியபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென 100 அடி பள்ளத்தில் செங்குத்தாக விழ்ந்ததாக கூறப்படுகின்றது.
விபத்தின்போது, பஸ்ஸில் பயணித்த பயணிகளின் கூச்சல் சத்தத்தைகேட்டு, அருகிலிருந்த பொதுமக்கள் மற்றும் பிற வாகன சாரதிகள் அனைவரும் உடனடியாக செயற்பட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும, விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்டு, சேலம் அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்து சிகிச்சைபெற்று வந்தவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும் பஸ்ஸின் சாரதி மீது வழக்கு பதிவு செய்துள்ள ஏற்காடு போலிஸாா், இச்சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.