இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்காவின், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டத்தை கைப்பற்றி போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் சிகாகோ, பிரான்சிஸ்கோ, நியூயார்க், கலிபோர்னியா உள்ளிட்ட நகரங்களில் உள்ள கொலம்பியா, ஹார்வர்ட், தெற்கு கலிபோர்னியா, டெக்சாஸ் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் கடந்த இரண்டு வாரங்களாக காஸா மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள் போராட்டத்தின் மையப் பகுதியான கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்தின் எச்சரிக்கை மீறியும் போராட்டம் தொடர்ந்திருந்தது.
இதனால், நியூயார்க் பொலிஸார் மாணவர்களின் போராட்டத்தை கலைக்க முயற்சித்ததை தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டடமான ஹெமில்டன் அரங்கை கைப்பற்றி மாணவர்கள் நேற்று அதிகாலை முதல் போராட்டம் நடத்தி வந்தனர்.
மேலும், குறித்த கட்டடத்தில் பறக்கவிடப்பட்டிருந்த அமெரிக்க கொடியை அகற்றி பாலத்தீன கொடியை பறக்கவிட்டதால் பரபரப்பும் ஏற்பட்டது.
இஸ்ரேல் நிறுவனங்களுடன் பல்கலைக்கழகம் போட்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்தல், நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் பொது மன்னிப்பு ஆகிய 3 கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஹெமில்டன் அரங்குக்கு நேற்று இரவு சென்றிருந்த பொலிஸார், அங்குள்ள இரண்டாவது மாடியின் ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்து போராட்டம் நடத்திய மாணவர்களை கைது செய்தனர்.
மாணவர்கள் வெளியேறும்போது பாலஸ்தீனத்தை விடுவியுங்கள் என்று முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கொலம்பியா பல்கலைக்கழகம் முழுவதும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நிகழ்வாண்டுக்கான பட்டமளிப்பு விழா நடைபெறும் மே 17 வரை பொலிஸார் பல்கலைக்கழகத்துக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிற பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் போராட்டத்தை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் அமெரிக்க அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது.
1968 ஆம் ஆண்டில் வியட்நாம் போருக்கு எதிரான போராட்டத்தின்போதும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஹெமில்டன் அரங்கம் ஆக்கிரமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.