பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“85 வருட காலமாக இலவச கல்வி இந்த உரிமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. அத்துடன், கஷ்டப் பிரதேசங்களில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு வரும் மாணவர்களின் வாழ்க்கையை வெற்றியடையச் செய்வதற்கு பல்கலைக்கழகத்தில் பெறும் கல்வி பாரிய உதவியாக அமைந்திருந்தது.
இந்த உரிமைக்கு இப்போது சவால் விடுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையில் கடுமையான மாற்றங்களை மேற்கொள்ளும் முன்மொழிவுகளை அரசாங்கம் முன்வைத்துள்ளது.
உயர்கல்விக்கான பொறுப்பை நேரடியாக ஏற்றுக் கொள்ள தற்போதைய அரசாங்கம் தயாராக இல்லை. அரசாங்கம் கொண்டு வந்துள்ள பிரேரணைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாதொழிப்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல முக்கிய செயல்பாடுகளை கொண்டுள்ளது.
பல்கலைக்கழக கட்டமைப்பின் கல்வித் தரத்தைப் பாதுகாப்பது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.
உயர்கல்விக்கான முன்மொழிவுகளை அரசாங்கம் கொண்டு வந்தாலும், அவை நேர்மையான முன்மொழிவுகள் அல்ல” என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.