புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய நபரைக் கைது செய்யுமாறு கோரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் பொலிசார் முன்னிலையில் தாக்கிய நபரை கைது செய்யுமாறு கோரி வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இன்று இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ‘பொலிசார் பக்கசார்பாக செயற்படாது குழாய் கிணறு ராசனை கைது செய், பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து தாக்கியவருக்கு பாதுகாப்பு கொடுக்காதே, பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீதும் நடவடிக்கை வேண்டும்” என பல்வேறு கோசங்களை எழுப்பி இருந்தனர்
இதனையடுத்து, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பாக 10 பேரை அழைத்து பேசியிருந்தார்.
இதன்போது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபரை 3 தினங்களுக்குள் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன், குறித்த சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட பொலிசார் மீதும் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.