பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் ஆணை இல்லை என்பதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை தொடர்பில் அறியாமையில் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்து உரையாற்றியபோதே எஸ்.எம்.மரிக்கார் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் கூறுகின்றது.
பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் ஆணை இல்லை என்பதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்பில் அவர்களுக்கு தெரியாதுள்ளது.
எரிவாயு எரிபொருள் கையிருப்பு உள்ள போதிலும் அவற்றை கொள்வனவு செய்வதற்கு மக்களிடம் பணம் இல்லை.
மின்தடை அமுல்படுத்தப்படாத போதிலும் நாட்டில் சுமார் ஒரு இலட்சம் மக்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவை இன்று மிகவும் மோசமடைந்துள்ளது. நாட்டு மக்கள் எதிர்காலம் தொடர்பில் அச்சத்துடனேயே வாழ்கின்றனர்.
இந்த நாடு இன்னும் வங்குரோத்து நிலையிலேயே உள்ளது. நாட்டின் கடன் தொகை மேலும் அதிகரித்துள்ளது.
இதனால் அடுத்தவருடம் வரி விதிப்பு மேலும் அதிகரிக்கப்படும் நிமையும் காணப்படுகின்றது” என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் மேலும் தெரிவித்தார்.