காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல என்றும், ஹமாஸ் படையினர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற யூத – அமெரிக்க பாரம்பரிய மாத நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜோ பைடன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”காசாவில் ஹமாஸ் படையினருக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில், இஸ்ரேலியப் படைகள் இனப்படுகொலை செய்யவில்லை. காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல. இனப்படுகொலை நடப்பதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்.
ஹமாஸால் பாதிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். ஒக்டோபர் 7ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 1,200 பேரைக் கொன்று நூற்றுக்கணக்கான பணயக் கைதிகளைப் பிடித்துச் சென்றவர்கள் ஹமாஸ் போராளிகள். இஸ்ரேலியர்களின் பாதுகாப்புக்கான அமெரிக்காவின் ஆதரவு என்பது இரும்புக் கவசத்தைப் போன்றது. ஹமாஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதைச் செய்ய நாங்கள் இஸ்ரேலுடன் இணைந்து செயற்படுவோம்” இவ்வாறு பைடன் தெரிவித்துள்ளார்.