நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இராணுவத்தினரால் மீறப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன்பியர்சன் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட யுத்ததின் போது கொல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் நினைவு கூர்ந்தவர்களை பொலிஸார் அச்சுறுத்தியதுடன் சிலரை தடுத்து வைத்திருந்தாகவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன் பியர்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கடந்த 18ஆம் திகதி வடக்கு கிழக்கில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டதாக எலைன் பியர்சன் மேலும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட தரப்பினரை மௌனிக்கச்செய்வதற்கே அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் என கடந்த 17 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததாகவும் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன் பியர்சன் நினைவு படுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை வெளிநாட்டு அரசாங்கங்கள்
ஐக்கியநாடுகள் அமைப்புகள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கான ஆணையை செப்டம்பர் அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை புதுப்பிப்பது மிகவும் அவசியம் என தெரிவித்த எலைன் பியர்சன், அந்த குற்றங்களிற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு உலகெங்கிலும் உள்ள சட்டத்தரணிகள் இந்த ஆதாரங்களை பயன்படுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.