இணைந்த வடக்கு கிழக்கிற்கான, தேச அரசியலலை மக்கள் மயமாக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவது காலத்தின் கட்டாயம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் வலியுறுத்தியுள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இறுதி யுத்தக் காலப்பகுதியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டதாகவும் யுத்தமற்ற காலப்பகுதியில் இனவாத வன்முறைகளால் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் பொது சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நடத்தப்பட்டபோது கிழக்கின் பல இடங்களில் பொலிசார் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதோடு தாக்குதலும் நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேரினவாதிகளின் தொடர் வன்முறைகளுக்கு பலத்த எதிர்ப்பை அருட்தந்தை மா.சத்திவேல் வெளியிட்டுள்ளார்.
சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் நாட்டில் இருக்கும் போதே இனவாத அரசின் கைக்கூலிகளான பொலிசார் கிழக்கில் தாக்குதலை மேற்கொண்டு கிழக்கை வடக்கோடு இணைய விடமாட்டோம் என்ற செய்தியை சர்வதேசத்துக்கு கூறி உள்ளதாகவும் அருட்தந்தை மா.சத்திவேல் குறிப்பிட்டுள்ளார்.
நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தலாம் என ஜனாதிபதி அறிவித்த பின்னரும் கிழக்கில் நான்கு பேரை பொலிசார் கைது செய்திருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே கிழக்கும் வடக்கும் இணைந்த தேச அரசியலை மக்கள் மயமாக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவதே காலத்தின் கட்டாயம் என தமிழ் தேசிய கொள்கையாளர்களும் அரசியல்வாதிகளும் உணராவிடின் கிழக்கு மட்டுமல்ல வடக்கும் துண்டாடப்படும் எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.