முல்லைத்தீவில் சுதந்திரமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்குமாறு கோரி மீனவர்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரையோரக் கிராமங்களில் ஒன்றான தியோநகர் பகுதியில் பிராதான வீதியினையும் கடற்கரையினையும், இணைக்கும் இணைப்பு வீதியானது சில தரப்பினரால் வேலியிட்டு அடைக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதியில் சுற்றுலாத்தளம் ஒன்றினை அமைத்துள்ள தனியார் நிறுவனம் ஒன்று மீனவர்களுக்கு தொடர்ச்சியாக இடையூறுகளை விளைத்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் அடைக்கப்பட்டுள்ள வேலித் தடைகளை அகற்றிய மக்கள் தமக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறும் வரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகக் கூறி நேற்றிரவு முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.