பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கமொன்றில் விஷவாயு கசிந்ததில் 11 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கமொன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 1,500 அடி ஆழத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த சுரங்கத்தில் திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்த வேளை அங்கு சுரங்க மேலாளர், ஒப்பந்ததாரர் உட்பட 11 பேர் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்த வேளை குறித்த 11 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தை தொடர்ந்து குறித்த சுரங்கத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.