கடனில் இருந்து நாட்டை மீட்டுத்தருவதாக கூறி ஆட்சிக்குவந்த ரணில் விக்ரமசிங்க
இன்று நாட்டை மேலும் கடன் சுமைக்குள் தள்ளியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கட்சி அலுவலகத்தில் இன்று இடமபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” 2022 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்த நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து விட்டதாக மத்திய வங்கி ஆளுநர் அறிவித்திருந்தார்.
நாடு பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த முடியாத அளவுக்கு நாட்டின் கடன் சுமை கடந்த காலத்தில் ஆட்சி செய்த தரப்புக்களால் அதிகரிக்கப்பட்டது.
83 ஆயிரம் மில்லியன் டொலர்கள் கடன் சுமையை தேசிய ரீதியாகவும் நாடு எதிர்கொண்டது. தொடர்ச்சியான கடன்சுமையால் நாடு பொருளாதார வங்குரோத்து அடைந்தது.
கடன் நெருக்கடிக்கு தீர்வாக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை நாடியது. அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாட்டிற்கு கடனுதவி கிடைக்கப்பெற்றது. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் பல யோசனை திட்டங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் யோசனை திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இதனால் நாட்டு மக்கள் மேலும் நெருக்கடியை எதிர்கொண்டனர். வரி அதிகரிப்பு, மின்சார கட்டன அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம், சமையல் எரிவாயு விலையேற்றம் என அனைத்து நெருக்கடியையும் மக்களே எதிர்கொண்டனர்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை அரசாங்கம் மேற்கொண்டது. ஆனால் சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொண்ட எந்தவொரு கடன்தொகையினையும் இதுவரை மீள செலுத்தவில்லை.
கடனில் இருந்து நாட்டை மீட்டுத்தருவதாக கூறி ஆட்சிக்குவந்த ரணில் விக்ரமசிங்க
இன்று நாட்டை மேலும் கடன்சுமைக்குள் தள்ளியுள்ளார்” இவ்வாறு விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.