தேயிலைக் கொழுந்து உற்பத்தியைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தேயிலைக் கொழுந்து உற்பத்தி கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது தற்போது குறைந்துள்ளதுடன், தேயிலைக் கொழுந்து பறிப்பதிலும் வினைத்திறனை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேடமாக உரம் சம்பந்தமான சிக்கல்கள் காரணமாக தேயிலைக் கொழுந்து உற்பத்தி குறைந்ததாகவும், கடந்த வருடத்தில் அது ஓரளவு சாதகமான நிலைமைக்கு வந்துள்ளதாகவும் அரச சார்பற்ற நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட பிரதிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேயிலைக் கொழுந்து உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தும் அதேவேளை, தரத்தை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என துறைசார் மேற்பார்வைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு, தற்போது தோட்டத் தொழிலார்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், அவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்படுவதனால் அதற்கு ஒப்பீட்டளவில் வினைத்திறனும் அதிகரிக்கப்பட வேண்டும் என அரச சார்பற்ற நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட பிரதிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அவ்வாறில்லை எனின் தேயிலைத் தொழிற் துறையில் நெருக்கடி நிலைமை உருவாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.