நாட்டின் நிலை குறித்த உண்மைத் தகவல்களை மக்களிடம் இருந்து மறைத்து அரசாங்கமானது அமிதாப் பச்சனை விடவும் திறம்பட நடித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 263 ஆவது நிகழ்வு கம்பஹா, வத்தளை, ஸ்ரீ ரதனபால மகா வித்தியாலத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளதாவது” எமது நாட்டில் வெளிநாட்டுக் கடன் இருதரப்பு கடன் மற்றும் பலதரப்பு கடன் என வகைப்பட்டு காணப்படுகின்றது. இருதரப்பு கடன் பாரிஸ் கிளப் மற்றும் பாரிஸ் கிளப் சாராத கடன் என வகைபட்டுள்ளது. மேலும் சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்களும் உள்ளனர்.
இது குறித்து மக்களுக்கு அதிகம் தெரியாது. பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் தொழிநுட்ப சாதனம் இருக்குமாக இருந்தால், இந்த தரவுகளை அணுக முடியும். இன்று நாட்டில் காலை வாரும் விளையாட்டே நடந்து வருகின்றது. இந்த தரப்பினரில் ஒருவருடன் மாத்திரம் இணக்கப்பாட்டை மேற்கொள்வதன் மூலம் வங்குரோத்து நிலையிலிருந்து வெளிவர முடியாது.
சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்களுடன் எமது நாடு நிலையான எந்தவொரு இணக்கப்பாட்டையும் மேற்கொள்ளவில்லை. உலகில் தலைசிறந்த நட்சத்திர நடிகர்கள் இருந்தாலும், எமது நாட்டில் ஆட்சியாளர்களே சிறந்த நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர்.
எமது ஆட்சியாளர்கள் அமிதாப் பச்சனையும் தாண்டிய நடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, உண்மையை உண்மையாக உடனே அறிய வேண்டியது மக்களின் பொறுப்பாகும். இந்த அரசாங்கம் சில தரவுகளை மறைத்துள்ளது. ஊழியர் சேமலாப நிதிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்கள் கூட இதுவரை வெளியிடப்படவில்லை” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.