கட்சி அரசியல் அன்றி, நாட்டை முன்னேற்றும் அரசியலுக்கே அனைவரும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தறை கோட்டை விளையாட்டரங்கில் நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” என்னிடம் டைட்டானிக் கப்பல் ஒன்றே ஒப்படைக்கப்பட்டது.
அதனை நான் தற்போது துறைமுகத்திற்குக் கொண்டுவந்திருக்கிறேன். இருந்த மாலுமிகள் அனைவரும் தப்பியோடிவிட்டனர். பனிப் பாறைக்குப் பயந்து அதனைப் பொறுப்பேற்க யாரும் இருக்கவில்லை.
கப்பல் மூழ்கி நாம் பலியாவதா? அல்லது கரையொதுங்குவதா என்ற கேள்வியே இருந்தது. நாம் தற்போது துறைமுகத்தை வந்தடைந்துள்ளோம். இந்தக் கப்பலுடன் நாம் என்ன செய்யப் போகிறோம். இந்தக் கப்பலைத் திருத்திக் கொண்டு இன்னும் 50 – 100 வருடங்களுக்குப் பாதுகாப்பாக பயணிக்கப் போகிறோமா? அல்லது தப்பியோடி மாலுமி ஒருவரிடம் கப்பலை ஒப்படைப்பதா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
நாங்கள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கவில்லை.
ஆனால் நாம் இந்த நெருக்கடியான காலத்தில் பலன்களை உங்களுக்குத் தந்துள்ளோம். தற்போது நாம் எதிர்காலப் பயணத்தைத் தொடர வேண்டியுள்ளது. வங்குரோத்து நிலையில் இருந்து மீள வேண்டியுள்ளது. பழைய முறையில் அரசியல் செய்ய முடியாது.
நாம் எடுக்கும் தீர்மானம் எங்கள் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதிலிருந்து நாம் விலகிச் சென்றால், நாம் எவ்வாறு தனித்துப் பயணிக்கப் போகிறோம் என்ற கேள்வி இருக்கிறது. இந்த உடன்படிக்கைகள் இல்லாமல் நாட்டை முன்நோக்கி நகர்த்த முடியுமா? இந்த உடன்படிக்கைகள் இல்லாமல் எமக்கு எதிர்காலம் இருக்கிறதா? அல்லது வரிசை யுகத்திற்கு மீண்டும் செல்வதா? இந்தக் கேள்விகளுக்கு விடை காண வேண்டும்”இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.