ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எந்த வகையிலும் விற்கப்படாது என்றும் மறுசீரமைப்பு மட்டுமே செய்யப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்
நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் 49% பங்குகளை வேறு நிறுவனத்திற்கு வழங்க முடியும் எனவும், ஆனால் பொருத்தமான முதலீட்டாளர் இதுவரை முன்வரவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் பாரிய நட்டத்தை சந்தித்து வரும் மத்தள விமான நிலையத்தின் நிர்வாகம் அடுத்த சில வாரங்களுக்குள் ரஷ்ய – இந்திய கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான படகுச் சேவை மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்ததாகவும் அமைச்சர் இங்கு சுட்டிகாட்டியுள்ளார்.