பிரித்தானியாவில் மான்செஸ்டர் விமானநிலையத்தில் பொலிஸார் அதிகாரிகள் சிலர், பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர்களை காலால் தாக்கும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் நேற்றிரவு நடத்தப்பட்டுள்ள நிலையில், ரோச்டேல் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி ஒருவர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீடியோவில், இளைஞர் ஒருவர் தரையில் விழுந்து கிடப்பதையும், அவரை நோக்கி இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மின்சாரம் பாய்ச்சும் துப்பாக்கியை நீட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
அத்துடன், மற்றொரு இளைஞனின் தலையை பொலிஸ் அதிகாரி ஒருவர் காலால் மதிப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
மேலும், மற்றொரு இளைஞர் மீது மிளகு தண்ணீர் வீசி, அவரின் கழுத்தை மடக்கி இளைஞனை கீழே தள்ளும் காட்சியும் பதிவாகியுள்ளது.
அத்துடன், தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில், நபர் ஒருவரை ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தரையில் வீழ்த்துவதையும் கைகளை பின்பக்கமாக இழுத்து வைத்திருப்பதையும், அந்த நபரை அதிகாரி ஒருவர் காலால் உதைப்பதையும் காணமுடிகின்றது.
இதில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான ஒரு இளைஞன் தான் சாதாரண மக்கள் எனக் கூறுவதையும் அவதானிக்க முடிகின்றது.
இந்த சர்ச்சைக்குறிய வீடியோ வெளியானதை தொடர்ந்து பிரித்தானிய, பொலிஸார் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இந்த சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், இதிலட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மான்செஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த தாக்குதலுக்கு இனவெறியே காரணம் என மெட்ரோபொலிட்டன் காவல்துறையின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.