”அரசாங்கம் தேர்தலைப் பிற்போட முயற்சி செய்கின்றது” என தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளரும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பொதுமக்கள் ஜனாதிபதித் தேர்தலையே எதிர்ப்பார்த்துள்ளனர். ஆனால் அரசாங்கம் தேர்தலை பிற்போடும் முயற்சியிலேயே உள்ளது.
அரசாங்கம் மீது மக்களுக்கு காணப்படும் நம்பிக்கையின்மை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் கிடைத்துள்ளது. எனவே ஆணைக்குழு இனியும் பின்வாங்காமல் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாளைய தினம் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. தேர்தல் தோல்விக்கு அஞ்சியே ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தேர்தலை பிற்போடுவதற்கான சதித்திட்ட முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றார்” இவ்வாறு விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.