பங்களாதேஷ் போராட்டகாரர்களின் வலுவான அழுத்தத்தை அடுத்து அந்நாட்டின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷில் எழுந்த நெருக்கடியால் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டு வெளியேறியுள்ளாா்.
இந்நிலையில், பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மொஹமட் சஹாபுதீன் உத்தரவிட்டுள்ள நிலையில்,
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான மொஹமட் யூனுஸ் தலைமையில்தான் இடைக்கால அரசு அமைய வேண்டும் என்பதில் மாணவ பிரதிநிதிகள் உறுதியாக இருந்துள்ளதுடன், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இடைக்கால அரசுக்கு தலைமை தாங்க மொஹமட் யூனுசும் தீர்மானித்துள்ளார்.
அதனை தொடர்ந்து 84 வயது மொஹமட் யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
எனினும், பங்களாதேஷில் மாணவர்கள் போராட்டம் ஆங்காங்கே நீடித்து வரும் நிலையில், நேற்று பங்களாதேஷ் உயர் நீதிமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு தலைமை நீதிபதி ஒரு மணித்தியாலத்தில் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், பங்களாதேஷில் மீண்டும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், தலைமை நீதிபதி பதவி விலக இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.