”நாட்டில் இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சி பீடம் ஏறிய மொட்டு கட்சி இன்று சுக்குநூறாக பிளவு பட்டுள்ளதாக” தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சம்பிக்க ரணவக்க, ரிசாட் பதியூதீன் ஆகியோர் சஜித்துடன் இருக்கின்றனர். சஜித் பிரேமதாச வவுனியாவுக்கும் மன்னாருக்கும் வருகைதரும் போது சம்பிக்க ரணவக்கவை கூட்டிவரமாட்டார்.
ஆனால், காலிக்கு செல்லும்போது சம்பிக்கவை அழைத்துச்செல்வார். எனினும் அங்கு ரிசாட் பதியூதீனை அழைத்துச் செல்லமாட்டார். என்ன அரசியல் இது. இதுதான் இரட்டை வேட அரசியல். கொள்கை இருப்பது தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே. நாங்கள் அனைத்து இன மக்களின் உரிமைகளை உறுதிசெய்யும் புதிய ஒரு அரசியலமைப்பை உருவாக்குவோம்.
பிரதேச சபைகளில் இருந்து அதிகாரப்பகிர்வை வழங்கும்படியான ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்படும். இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சியினை பெற்ற மொட்டு கட்சி இன்று சுக்குநூறாகிப்போயுள்ளது. இனவாதம் சாதிவாதத்துக்கு தேசிய மக்கள் சக்தியில் இடமில்லை.
போதைப்பொருள் பின்புலத்தில் இருப்பது அரசியல்வாதிகளே.
அது உங்கள் குழந்தைகளை பாதிக்கும். கிராமத்தை பாதிக்கும். அதனை முழுமையாக நாம் தடுத்து நிறுத்துவோம். ரணில் கடைசி நேரத்தில் தோல்வியடைவார். சத்தமில்லாமல் வீடு செல்வார். அது அவருக்கு பழக்கப்பட்ட ஒன்று” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.