-ஜெ.அனோஜன்-
2001 ஆம் ஆண்டு இதே நாளில் (செப்டெம்பர் 11), அல்-கொய்தா பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய 19 போராளிகள் அமெரிக்காவில் நான்கு விமானங்களை கடத்தி, மூன்று கட்டிடங்களில் மீது மோதி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் இந்த நூற்றாண்டின் மிக அதிர்ச்சிகரமான சம்பவங்களில் ஒன்றாக உள்ளது.
தாக்குதலின் நோக்கம் என்ன?
அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் பறந்து கொண்டிருந்த நான்கு விமானங்கள், கடத்தல்காரர்களின் சிறிய குழுக்களால் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்டன.
நியூயோர்க் மற்றும் வொஷிங்டனில் உள்ள முக்கிய கட்டிடங்கள் மீது மோதுவதற்கு அவை ராட்சத ஏவுகணைகளாக பயன்படுத்தப்பட்டன. நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களை இரண்டு விமானங்கள் தாக்கின.
முதலில் கிழக்கு நேரப்படி காலை 08:46 மணிக்கு (12:46 GMT) வடக்கு கோபுரத்தைத் தாக்கியது. இரண்டாவது 09:03 மணிக்கு தெற்கு கோபுரத்தில் மோதியது. கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன, நகரமே புகை மண்டலமாக மாறியது, இரண்டு மணி நேரத்திற்குள், இரு 110 அடுக்கு மாடிக் கோபுரங்களும் பாரிய தூசி மேகங்களில் இடிந்து விழுந்தன.
காலை 09:37 மணிக்கு மூன்றாவது விமானம் பென்டகனின் மேற்கு முகத்தை அழித்தது – நாட்டின் தலைநகரான வொஷிங்டன் டிசிக்கு வெளியே அமெரிக்க இராணுவத்தின் மாபெரும் தலைமையகம் அது.
நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் காலை 10:03 மணிக்கு பயணிகள் போராடியதையடுத்து வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது.
இதன்போது, கடத்தல்காரர்கள் வொஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் கட்டிடத்தை தாக்க திட்டமிட்டதாகக் கருதப்பட்டது.
எத்தனை பேர் இறந்தனர்?
பயங்கரவாதிகள் தவிர மொத்தம் 2,977 பேர் இந்த தாக்குதல் காரணமாக உயிர்களை இழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் நியூயோர்க்கில் உள்ளவர்கள்.* நான்கு விமானங்களில் இருந்த 246 பயணிகள் மற்றும் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்
* இரட்டைக் கோபுரத்தில், 2,606 பேர் இறந்தனர் – பலர் காயமடைந்தனர்
* பென்டகனில் 125 பேர் கொல்லப்பட்டனர்
முதல் விமானம் தாக்கியபோது, 17,400 பேர் கோபுரங்களில் இருந்தனர்.
வடக்கு கோபுரம் மீதான தாக்குதலில் மேலே யாரும் உயிர் பிழைக்கவில்லை, எனினும் 18 பேர் தெற்கு கோபுர தாக்குதலின் போது தப்பிக்க முடிந்தது.
பலியானவர்களில் 77 வெவ்வேறு நாடுகளின் குடிமக்கள் அடங்குவர்.
தாக்குதலின் போது பதிலளிப்புக்காக விரைந்து செயற்பட்ட 441 நபர்களை நியூயோர்க் நகரம் இழந்தது.
நச்சு புகை மண்டலத்துக்கு மத்தியில் பணிபுரிந்த தீயணைப்பு வீரர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர் அல்லது பின்னர் தாக்குதலுடன் தொடர்புடைய வெவ்வேறு நோய்களுக்கு ஆளாகினர்.
தாக்குதலின் சூத்திரதாரிகள் யார்?
அல்-கொய்தா என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டது.
ஒசாமா பின்லேடனின் தலைமையில் அல்-கொய்தா, முஸ்லிம் உலகில் மோதல்களுக்கு அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளும் குற்றம் சாட்டி இந்த தாக்குதலை அரங்கேற்றியது.
19 பேர் கடத்தல்களை மேற்கொண்டனர், ஐந்து பேர் கொண்ட மூன்று குழுக்கள் மற்றும் நான்கு பேர் கொண்ட ஒரு குழுவாக (பென்சில்வேனியாவில் விபத்துக்குள்ளான விமானத்தில்) இந்த தாக்குதல் அரங்கேற்றப்பட்டது.
ஒவ்வொரு குழுவிலும் பைலட் பயிற்சி பெற்ற ஒருவர் இருந்தனர்.
15 கடத்தல்காரர்கள் பின்லேடனைப் போலவே சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். இருவர் ஐக்கிய அரபு அமீரகத்தையும் ஒருவர் எகிப்தையும், ஒருவர் லெபனானைச் சேர்ந்தவரும் ஆவார்.
அமெரிக்கா எவ்வாறு பதிலளித்தது?
தாக்குதல்கள் நடந்து ஒரு மாதத்திற்குள், ஒரு சர்வதேச கூட்டணியின் ஆதரவுடன் – அல்-கொய்தாவை ஒழிக்கவும் பின்லேடனை வேட்டையாடவும் அப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆப்கானிஸ்தான் மீது படையெடுப்பை நடத்தினார் –
எனினும், 2011 ஆம் ஆண்டிலே அமெரிக்கப் படைகள் இறுதியாக பின்லேடனை அண்டை நாடான பாகிஸ்தானில் கண்டுபிடித்து கொன்றது.
9/11 தாக்குதலுக்கு திட்டமிட்டதாகக் கூறப்படும் காலித் ஷேக் மொஹமட் 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
அவர் பல ஆண்டுகளாக குவாண்டனாமோ விரிகுடாவில் விசாரணைக்கு செல்லாமல் அமெரிக்க காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தற்சமயம், அவரும் மற்ற இரண்டு சதிகாரர்களும் மரண தண்டனையைத் தவிர்ப்பதற்கு ஈடாக ஒரு வேண்டுகோள் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலின் எதிரொலி என்ன?
9/11க்கு அடுத்த ஆண்டுகளில் உலகம் முழுவதும் விமானப் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது. அமெரிக்காவில், விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் உருவாக்கப்பட்டது.
இடிந்து விழுந்த இரட்டைக் கோபுரங்களைச் சுத்தம் செய்ய எட்டு மாதங்களுக்கு மேல் ஆனது. ஒரு நினைவுச்சின்னம் மற்றும் ஒரு அருங்காட்சியகம் இப்போது தளத்தில் நிற்கிறது, மேலும் கட்டிடங்கள் மீண்டும் ஒரு வித்தியாசமான வடிவமைப்பிற்கு உயர்ந்துள்ளன.
முடிக்கப்பட்ட மையப்பகுதி – ஒரு உலக வர்த்தக மையம் அல்லது “சுதந்திர கோபுரம்” – அசல் வடக்கு கோபுரத்தை விட (1,776 அடி (541 மீ) உயரத்தில் உள்ளது. அசல் கோபுரத்தின் உயிரம் 1,368 அடி.