இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரதமர் பதவியும் வெற்றிடமாக காணப்பட்ட இந்த நாட்டில் தற்போது ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றுவதற்காக 38 பேர் போட்டியிடுவதாக சுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்
இயலும் ஸ்ரீலங்கா வெற்றிப்பேரணி சுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திருகோணமலை கந்தளாய் பகுதியில் இன்று இடம்பெற்றது.
தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் பலரும் பேரணியில் கலந்து கொண்டனர்.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தின் பலபகுதிகளைச் சேர்ந்த மக்கள் பேரணியில் பங்கேற்றிருந்ததுடன் ஜனாதிபதிக்கு தமது ஆதரவினையும் வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
கோட்டாபய ஆட்சிக்கு வந்தபோது வரியை குறைக்க வேண்டாம் என நான் பலமுறை வலியுறுத்தியிருந்தேன். சர்வதேச நாணய நிதியம் 2016 ஆம் ஆண்டிலேயே ஒரு விடயத்தினை தெரிவித்திருந்தது போன்று நிதியுதவி வழங்குவதை நிறுத்தியது.
2020 ஆம் ஆண்டில் பொதுத்தேர்தல் வந்தது. பலரும் பல வாக்குறுதிகளை வழங்கினார்கள் வரியை குறைப்பதாகவும் பொருட்களின் விலையை குறைப்பதாகவும் கூறினார்கள்.
ஆனால் நாட்டிற்கு 6 பில்லியன் டொலர் தேவைப்படுவதாக நாம் கூறியிருந்தோம்.அதனை எவரும் செவிமடுக்கவில்லை. இறுதியில் நாடு வீழ்ச்சியடைந்தது.
அதனாலேயே பொதுஜன பெரமுன வீழ்ச்சியடைய நேரிட்டது. இது வரலாற்றில் முதற்தடவையாக இடம்பெற்ற சம்பவமாகும் அதாவது பொதுஜன பெரமுன வீழ்ச்சியடைந்த போது நாட்டை பொறுப்பேற்க எவரும் இருக்கவில்லை.
பிரதமர் பதவிக்கு இடைவெளி காணப்பட்ட முதலாவது நாடாக அன்று இலங்கை பதிவானது.பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு அப்போதைய ஜனாதிபதி பலரிடம் கோரியிருந்தார்.
ஆனால் எவருமே அதற்கு முன்வரவில்லை. இறுதியில் நாட்டை பொறுப்பேற்குமாறு எனக்கு அழைப்பு விடுத்தார்கள். பிரதமராகி பின்னர் ஜனாதிபதியாக இந்த நாட்டை பொறுப்பேற்றேன்.
2 வருடங்களில் இந்த நாட்டை நாம் சரியான பாதைநோக்கி வழிநடாத்தி செல்கின்றோம். இப்போது இந்த நாட்டை பொறுப்பேற்க 38 பேர் போட்டியிடுகின்றனர்.இவர்களால் இந்த நாட்டை முன்கொண்டு செல்ல முடியுமா?
நான் தனியாகவே இந்த நாட்டை பொறுப்பேற்றேன். அரசாங்கத்தினை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நான் அழைப்பு விடுத்திருந்தேன். சஜித் பிரேமதாச மறுப்பு தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே நூற்றுக்கு நூறு வீதம் ஒத்துழைப்பு வழங்கியது. இறுதியில் இது ராஜபக்ஷ அரசாங்கம் என எதிர்த்தரப்பினர் கூறினார்கள்.
வீழ்ச்சியில் இருந்து நாட்டை கட்டியெழுப்பும் எனது வேலைத்திட்டங்களுக்கு மஹிந்த தரப்பு பெரும்பான்மையானவர்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள் வீழ்ச்சியில் இருந்து மீட்டு நாட்டை கட்டியெழுப்புவதே எனது நோக்கமாகும்.
நான் அதற்கான திட்டங்களை கட்டம் கட்டமாக முன்னெடுத்துள்ளேன். நாட்டு மக்களுக்கு பல நிவாரணம் வழங்கி வருகிறோம். அரச மற்றும் தனியாா் துறையினரின் சம்பளத்தினையும் அதிகரித்துள்ளோம்.
டிஜிட்டல் பொருளாதார முறைமையை அறிமுகப்படுத்துவோம். இந்த நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டும் வாழ்க்கை சுமையினை குறைப்பதே எனது பிரதான எதிர்ப்பார்ப்பாகும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தொிவித்தாா்.