பயங்கரவாதம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக, ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விரிவுபடுத்துவதாக கனேடிய அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (15) அறிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஈரானில் சிரேஷ்ட அரசாங்க அதிகாரியாக பணியாற்றிய எவரும் கனடாவிற்குள் நுழைவதை இந்த புதிய உத்தரவு தடுக்கின்றது.
அத்துடன், குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் (IRPA) பிரிவு 35(1)(b) இன் கீழ் 2022 நவம்பரில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஈரானிய ஆட்சிக்கு எதிரான முந்தைய தடைகளை இந்த நடவடிக்கை மேம்படுத்துகின்றது.
ஈரானுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகள் பல தசாப்தங்களாக இழுபறியில் உள்ளன. கனடா ஆரம்பத்தில் 2012 இல் ஈரானை பயங்கரவாதத்தின் அரச ஆதரவாளராக அறிவித்ததுடன், ஒட்டாவா அன்று முதல் தெஹ்ரானுடான இராஜதந்திர உறவுகளையும் துண்டித்திருந்தது.
2024 ஜூன் 19 அன்று, இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையை (IRGC) ஒரு பயங்கரவாத அமைப்பாக கனடா பட்டியலிட்டதுடன், கனேடிய நிதி நிறுவனங்கள், IRGC உறுப்பினர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும் என வலியுறுத்தியது.
ஈரானுக்கு எதிரான கனேடியத் தடைகள் 2010 இல் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
அதன் பின்னர், சிறப்புப் பொருளாதார நடவடிக்கைகள் சட்டம் (SEMA)மற்றும் ஊழலால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு அதிகாரிகளுக்கான நீதிச் சட்டம் (JVCFOA) ஆகியவற்றின் கீழ் ஈரானிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைக் குறிவைத்து கனடா பல தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.