மேல் மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஹனிப் யூசூப் இலங்கையின் பொதுச் சேவைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்.
கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கையின் வர்த்தக துறையின் முக்கிய பிரமுகரான ஹனிப் யூசூப், அனைத்து அதிகாரிகளின் கூட்டு முயற்சியினால் மட்டுமே இதனை அடைய முடியும் என சுட்டிக்காட்டினார்.
எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது தொடர்பில் ஜனாதிபதி தம்முடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்த ஹனிப் யூசூப், தற்போது அரச சேவைகளில் தலைவிரித்து ஆடுகின்ற இலஞ்சம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்த முறைமை மாற்றம் தேவை என்றார்.
டுபாயின் பொதுச் சேவைகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் பற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், இலங்கை அத்தகைய தரநிலைகளை எதிர்நோக்க வேண்டும் என்றும், அதிகாரிகளின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி அத்தகைய திட்டங்களை செயல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
மாற்றம் நடைபெறுவதை நான் உறுதி செய்வேன், இதை நாங்கள் பொதுமக்களுக்கு நிரூபிப்போம். ஊழலை ஒழிப்போம். தேசத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று அவர் மேலும் கூறினார்.