ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டுள்ள 107 அரச வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதியின் நியமனத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டவாறு ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட 107 வாகனங்கள் தற்காலிகமாக பொலிஸ் பாதுகாப்பில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தின் வழமையான ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை, ஆனால் முன்னாள் ஜனாதிபதியினால் அரசியலமைப்பின் 41 (1) சரத்தின் கீழ் நியமிக்கப்பட்ட தனது தனிப்பட்ட ஊழியர்களுக்கு அவரது பதவிக்காலத்தில் வழங்கப்பட்டது.
மேலும், ஜனாதிபதி செயலகத்தில் அதிக வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாத காரணத்தினாலும், காட்சிப்படுத்துவதற்காக அல்ல என்பதாலும், ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியில் உள்ள வளாகத்தில் இந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் வழங்கிய பணிப்புரையின் பிரகாரம், அத்தியாவசிய சேவைகளுக்காக இந்த வாகனங்களை விரைவாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தை பாதுகாக்கும் வகையில், அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட வாகனங்களின் முழுமையான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு MERCEDES BENZ 300, ஜனாதிபதி விசேட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுக்கு TOYATO LAND CRUISER V8, சிரேஷ்ட ஆலோசகர் அகிலவிராஜ் காரியவசத்துக்கு TOYATO LAND CRUISER, சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஸூக்கு LAND ROVE DEFENDER 110 என்ற வானகங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு LAND ROVER DISCOVERY 4, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு TOYATO LAND CRUISER PRADO , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனுக்கு TOYATO HILUX , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு TOYATO LAND CRUISER CRUISER மற்றும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு TOYATO LAND CRUISER PRADO போன்று 107 தனிப்பட்ட ஊழியர்களுக்கு இவ்வாறு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.