இலங்கையில் பல வருடங்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 56 கைதிகள் வாடகை விமானம் மூலம் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 56 கைதிகளும் கடந்த 6ஆம் திகதி விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை சேர்த்த 56 கைதிகளில் 51 ஆண் கைதிகளும் 5 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாகவும், சிறைச்சாலை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இலங்கையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கைதிகளின் சிறைத்தண்டனைகள் அவர்களின் சொந்த நாட்டு சிறைச்சாலைகளில் அனுபவிப்பதாகற்காகவே இவ்வாறு நாடுகடத்தப்படுவதாக காமினி பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் இவ்வாறு அதிகளவான கைதிகள் இடமாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்றும் காமினி பி.திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
1995 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க குற்றவாளிகள் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் இந்த 56 பாகிஸ்தான் கைதிகள் பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த பாகிஸ்தானை சேர்ந்த 64 இராஜதந்திர அதிகாரிகளின் இந்த 56 கைதிகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த 56 கைதிகளையும் வெலிக்கடை சிறைச்சாலையில்
இருந்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக 47 சிறை அதிகாரிகள் மற்றும் அவசரகால படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.