டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் 500 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த போதிலும், இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை பாகிஸ்தான் பதிவு செய்தது.
முதல்தானில் இன்று (11) நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் மற்றும் 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 556 ஓட்டங்களை எடுத்தது.
பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 823 ஓட்டங்களை பெற்ற நிலையில் டிக்ளேர் செய்தது.
இந்த இன்னிங்ஸில் ஹாரி புரூக் அதிகபட்சமாக 317 ஓட்டங்களையும், ஜோ ரூட் 262 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 454 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் அதிகப்படியான இணைப்பட்ட ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
அதேநேரம், டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது மிக உயர்ந்த இணைப்பாட்டமாகவும் இது பதிவு செய்யப்பட்டது.
பின்னர், 267 ஓட்டங்ள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் போட்டியின் இறுதி நாளான இன்று 220 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்து, சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது.
சொந்த மண்ணில் இறுதியாக நடைபெற்ற 11 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவிய 7 ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.
எவ்வாறெனினும், பாகிஸ்தானுடனான இந்த வெற்றியின் மூலமாக இங்கிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் ஒக்டோபர் 15 ஆம் திகதி ஆரம்பமாகும்.