தலைநகர் ஆண்டு முழுவதும் காற்று மாசுபாடு பிரச்சினையை எதிர் கொண்டு வரும் நிலையில், இந்திய உயர் நீதிமன்றம் திங்களன்று (11) புது டெல்லி காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
அதேநேரம், நகரில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதை தடுக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறும் அது வலியுறுத்தியது.
எந்தவொரு மதமும் மாசுவை உருவாக்கும் எந்த செயலையும் ஊக்குவிப்பதில்லை என்று நாங்கள் கருதுகிறோம் என்று தெரிவித்த இந்திய உயர் நீதிமன்றம், இந்த முறையில் பட்டாசுகளை வெடித்தால், அது குடிமக்களின் ஆரோக்கியத்திற்கான அடிப்படை உரிமை பிரச்சினையையும் ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியது.
தற்போதுள்ள பட்டாசு வெடிப்பதற்கான தடையை அமல்படுத்தத் தவறியதற்காக டெல்லி அரசு மற்றும் காவல்துறையைக் கடுமையாகக் கண்டித்த நீதிபதிகள் குழு, ஒக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் மாத்திரம் பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிப்புக்கு ஏன் கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை என்றும் கேள்வி எழுப்பியது.
அதேநேரம், எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதிக்குள் நகரில் பட்டாசுக்கு நிரந்தரத் தடை விதிப்பது குறித்து டெல்லி அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
தடைக்கு மத்தியிலும் ஆண்டு தோறும் பெரும் காற்று மாசுபாட்டினை எதிர்கொண்டு வரும் டெல்லியில் கடந்த தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசு வெடிக்கப்பட்டது.
இதனால், உலகின் மிகவும் காற்று மாசுபாடு கொண்ட நகரம் என்ற மோசமான பெருமையை டெல்லி பெற்றது.