மும்பை கடற்கரையில் புதன்கிழமை (18) மாலை இந்திய கடற்படை படகொன்று தனியார் பயணிகள் படகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து (இந்தியாவின் நுழைவாயில்) மும்பை நகரத்தின் துறைமுகத்திற்கு கிழக்கே அமைந்துள்ள எலிபெண்டா தீவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற படகே நேற்று மாலை 4.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் நான்கு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் கடற்படை வீரர் ஒருவரும் கடற்படை கப்பலில் இருந்த மேலும் இருவருமே அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், குறைந்தது 100 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
விபத்தினை அடுத்து கடலோர காவல்படை மற்றும் கரையோரே பொலிஸாருடன் இணைந்து கடற்படையினரால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன.
நான்கு கடற்படை ஹெலிகாப்டர்கள், 11 கடற்படை கப்பல்கள், ஒரு கடலோர காவல்படை படகு மற்றும் மூன்று கரையோர பொலிஸ் படகுகள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
தனியார் படகிலிருந்து மீட்கப்பட்ட பயணி ஒருவரின் தகவலுக்கு அமைவாக, படகில் பயணித்த எவருக்கும் பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே மும்பை துறைமுகத்தில் என்ஜின் சோதனையின் போது இந்திய கடற்படைக் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது என்பது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், கடற்படை விரைவுப் படகு ஓட்டுநர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
அதேநேரம், விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியத்திலிருந்து தலா ₹2 இலட்சம் ரூபாவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ₹50,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.