இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் காஸா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை சுமார் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
எனினும், இன்னும் சில முக்கிய விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலை உள்ளதாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீனிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கட்டார் தலைநகர் தோஹாவில் இந்தப் பேச்சுவார்த்தையில், எகிப்தின் எல்லையில் தெற்கு காசாவில் உள்ள ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பகுதியான பிலடெல்பி நடைபாதையில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து இருப்பது தீர்க்கப்படாத விடயங்களில் ஒரு முக்கிய புள்ளியாகும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
அத்துடன், காஸாவுடனான இஸ்ரேலின் எல்லையின் நீளத்தில் பல கிலோ மீட்டர் அகலத்தில் ஒரு மண்டலத்தை உருவாக்குவதும், அங்கு இஸ்ரேல் தனது இராணுவ இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுள் அடங்கும்.
இந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால், கீழ் காணும் மூன்று கட்ட போர் நிறுத்தம் சில நாட்களுக்குள் ஒப்புக் கொள்ளப்படலாம் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
01. பணயக்கைதிகள் மற்றும் கைதிகள் பரிமாற்றம்:
முதல் கட்டமாக விடுவிக்கப்படும் ஒவ்வொரு பெண் இஸ்ரேலிய இராணுவ வீரருக்கும் 20 பாலஸ்தீன கைதிகள் பரிமாறிக் கொள்ளப்படுவார்கள்.
கைதிகளின் பெயர்கள் விவாதிக்கப்படுகின்றன.
மேலும் இஸ்ரேலின் சிறைகளில் 25 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 400 பாலஸ்தீனியர்களின் பட்டியலிலிருந்து தேர்வு செய்யப்படுவார்கள்.
இருப்பினும், விடுதலையானது மூத்த பாலஸ்தீனத் தலைவர் மர்வான் பர்கௌதியை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.
02. பணயக்கைதிகள் விடுதலை:
காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுவார்கள்.
சிறைபிடிக்கப்பட்ட 96 பணயக்கைதிகளில் 62 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் கருதுகிறது.
03. காஸாவின் குடிமக்கள் திரும்புதல்:
பேச்சுவார்த்தைகளின்படி, எகிப்து மற்றும் கட்டார் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அமைப்பின் கீழ் காசா குடிமக்கள் வடக்கு காசாவிற்கு திரும்ப அனுமதிக்கும் ஒரு நடைமுறை விவாதிக்கப்படுகிறது.
மேலும் நாள் ஒன்றுக்கு 500 டிரக்குகளின் உதவியுடன் இவர்கள் காஸாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அண்மைய வாரங்களில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் தங்கள் மத்தியஸ்த முயற்சிகளை மீண்டும் தொடங்கியுள்ளன.
ஒக்டோபர் நடுப்பகுதியில் நடந்த பேச்சு வார்த்தைகள் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கத் தவறியது, ஹமாஸ் குறுகிய கால போர்நிறுத்த முன்மொழிவை நிராகரித்துள்ளமையும் குறிப்பிடத்கத்கது.