மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கட்டணத்துடன் கூடிய கல்வி வகுப்புகளை நடத்துவதற்கு தடைவிதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தடை பாடசாலை நேரம், பாடசாலைக்கு பின்னரான நேரம், வார இறுதி நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களில் பொருந்தும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாண கல்விச் செயலாளர் கே.ஏ.டி.ஆர் நிஷாந்தி ஜயசிங்கவின் கையொப்பத்துடன் கூடிய சுற்றறிக்கை, கல்விப் பணிப்பாளர், பிராந்திய பணிப்பாளர்கள், பிரதேச கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இக்கொள்கை ஆரம்பத்தில் சப்ரகமுவ மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு பின்னர் மேல் மாகாணத்திற்கும் விரிவுபடுத்தப்படுவதற்கு முன்னர் மத்திய மாகாணத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.