துருக்கியில் உள்ள விருந்தகம் ஒன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.
துருக்கியின் பொலு மாகாணத்தில் அமைந்துள்ள கர்தல்கயா ரிசார்ட் பகுதியில் இயங்கிவரும் கிரான்ட் கர்த்தால் என்ற 12 மாடிகளைக் கொண்ட விருந்தகத்தின் 12 ஆவது மாடியில் இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதன்போது குறித்த ஹோட்டலில் 238 பேர்வரை தங்கியிருந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருந்தகத்தின் 12ஆவது மாடியில் பரவிய தீ ஏனைய பகுதிகளுக்கும் பரவியதால் அறைகளில் தங்கியிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் எனவும், அப்போது மூவர் தீயில் சிக்காமல் இருக்க மாடியில் இருந்து கீழே குதித்தபோது உயிரிழந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தீக்காயம் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், சிலர் அட்டைகள் மற்றும் போர்வைகளை பயன்படுத்தி கீழே குதித்து உயிர் தப்பியுள்ளனர் எனவும், 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், 12 மணித்தியாலங்களுக்குப் பின்னர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், குறித்த விருந்தகத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் துருக்கி பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.