துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடைய 84 சந்தேக நபர்களை இலங்கை பொலிஸார் கடந்த 03 மாதங்களுக்குள் கைது செய்துள்ளனர்.
அதேநேரம், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று T-56 ஆயுதங்கள் மற்றும் 05 கைத்துப்பாக்கிகள், குற்றங்களை மேற்கொள்ள பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் கடந்த 03 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள வெளிநாட்டில் வசிக்கும் பாதாள உலக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றும் சந்தேகநபர் சம்பவம் இடம்பெற்ற 10-15 நிமிடங்களுக்குள் பொலிஸ் நடமாடும் ரோந்துப் பிரிவுகள் மற்றும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக நிறுவப்பட்ட சோதனைச் சாவடிகள் காரணமாக கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, மன்னார் நீதிமன்றத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அனைவரும் சம்பவம் இடம்பெற்ற 04 முதல் ஐந்து நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் பொலிஸார் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.