எல்ல உட்பட மலையக ரயில் சேவை மார்க்கமூடான இ- டிக்கெட் மோசடி தொடர்பில் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து சந்தேகநபர் நேற்று (26) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடுகன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரிடம் இரண்டு ரயில் இ-டிக்கெட்டுகள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எல்ல ஒடிசி ரயில் சேவை தொடர்பான ரயில் இ-டிக்கெட் மோசடி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அண்மைய கைது இதுவாகும்.
கடந்த வாரம், இந்த மோசடி தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த மோசடி, ஆன்லைன் டிக்கெட் சந்தை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து 42 வினாடிகளில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்த பின்னர் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது.
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் அண்மைய கலந்துரையாடலின் போது, போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, எல்லக்கான ரயில் சேவைகளுக்கான இ-டிக்கெட் தொடர்பான பாரிய அளவிலான மோசடி குறித்து கவலைகளை எழுப்பினார்.
இதன்போது, சில குழுக்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலைக்கு மறுவிற்பனை செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
குறிப்பாக 2,000 ரூபாவான டிக்கெட் விலை மறுவிற்பனை மூலமாக 16,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமையும் கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.