மட்டக்களப்பு கொங்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்யப்படும் பாரிய நிலையமொன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது 15 இலட்சம் மில்லி லீற்றர் கோடா மற்றும் 5 இலட்சத்து 25 000 லீட்டர் சட்டவிரோத மதுபானம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு கொட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்பட்ட மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் இயங்கிவந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமே இவ்வாறு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினராலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கையின்போது 23 பரள்களில் காணப்பட்ட சுமார் 14 இலட்சத்து 50 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மற்றும் 750 போத்தல்களில் அடைக்கப்பட்டிருந்த 5 , 25 000 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேநேரம், இந்த உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பயணித்த சிறிய தோனியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், இங்கு காணப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்திக்குத் தேவையான பெருமளவிலான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தின்போது சந்தேகநபர்கள் யாரும் கைது செய்யப்படாத நிலையில், கொக்கட்டிச்சோலை பொலிஸார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.