பிரபல எல்ல சுற்றுலா நகருக்கு அருகில் உள்ள எல்ல பாறை பகுதியில் நேற்று (13) ஏற்பட்ட காட்டுத் தீ, இன்று காலை சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் வேகமாக பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 10 ஏக்கர் வனப்பகுதி ஏற்கனவே தீயில் எரிந்து நாசமாகிவிட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) உறுதி செய்துள்ளது.
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராவணா எல்ல வனப்பகுதியில் நேற்று மாலை 4.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
வேண்டுமென்றே விசமிகளால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் தொடரும் வறண்ட வானிலை, பலத்த காற்று மற்றும் செங்குத்தான நிலப்பரப்பு ஆகியவற்றால் நிலைமை மோசமாகி தீப்பரவலானது எல்லா மலைத்தொடர் முழுவதும் பரவக்கூடும் என்ற கவலை அதிகரித்து வருகிறது.
இது கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு மிகவும் சவாலை ஏற்படுத்தியுள்ளதாகவும் DMC தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் எதிரொலியாக, பண்டாரவளை வனப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், எல்ல பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் தியத்தலாவையில் உள்ள விமானப்படை மற்றும் இராணுவத்தினர் நேற்று முதல் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.
மேலும், எல்ல-வெல்லவாய பிரதான வீதிக்கு தீ பரவாமல் தடுக்க பண்டாரவளை மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.