2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்ட உரை இன்று (17) திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து வரவுசெலவுத் திட்ட தொடர்பான விவாதம் பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு செலவுத் திட்டமாகும்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைபை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று (16) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மீளாய்வு செய்தார்.
இந் நிகழ்வில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் கலந்துகொண்டார்.
இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார மற்றும் நிதிச் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் எதிர்வரும் வருடத்திற்கான முக்கிய நிதி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இதனிடையே, வரவுசெலவுத் திட்ட சமர்ப்பிப்பு தொடர்பில் எக்ஸ் பதிவொன்றில் ஜனாதிபதி, “முன்னேற்றத்தையும் ஸ்திரத்தன்மையையும் செலுத்தும் வரவு செலவுத் திட்டத்திற்கு அர்ப்பணிப்புடன்” இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இதற்கான ஆயத்தமாக, வரவு செலவுத் திட்டத்தின் இறுதிக்கட்டப் பணிகள் குறித்த ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடல் பெப்ரவரி 13 ஆம் திகதி இடம்பெற்றதாகவும், நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உட்பட பல அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 09 ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காகப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ஏழு நாட்கள் இடம்பெறவுள்ளது.
அத்துடன், பெப்ரவரி 25 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் குறித்த குழுநிலை விவாதம் பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை 4 சனிக்கிழமை நாட்கள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளன.
இதற்கான வாக்கெடுப்பு மார்ச் 21 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
வரவுசெலவுத்திட்ட காலப்பகுதியில் காலை 9.30 மணி முதல் காலை 10.00 மணி வரையான நேரம் 5 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையான காலப் பகுதியில் வரவுசெலவுத்திட்ட விவாதம் இடம்பெறும்.
வாக்கெடுப்பு நடத்தப்படும் தினங்களான பெப்ரவரி 25 மற்றும் மார்ச் 21 ஆம் திகதிகள் தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் மாலை 6.00 மணி முதல் மாலை 6.30 மணிவரையான காலப்பகுதி சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.