டொராண்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை (17) பிற்பகல் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது 18 பேர் காயமடைந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மினியாபோலிஸிலிருந்து வந்த டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் டொராண்டோ நேரப்படி பிற்பகல் 2:30 மணியளவில் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது.
இதன் விளைவாக அவசரகால பணியாளர்களின் மீட்பு பணிகளுக்காக பல மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டது.
விபத்தின் பின்னர் விமான நிறுவனம் தனது இணையதளத்தில் மாலை 5:42 மணிக்கு வெளியிட்ட ஒரு அறிக்கையில் துரதிர்ஷ்வசமான சம்பவத்தினால் 18 பேர் காயமடைந்தனர் என்று குறிப்பிட்டது.
எனினும், மாலை 07.00 மணியளவில் பியர்சன் விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 என்று கூறினார்.
விமானத்தில் நான்கு பணியாளர்கள் மற்றும் 76 பயணிகள் இருந்தனர்.
அவர்களில் 22 கனேடியர்கள், ஏனையவர்கள் பன்னாட்டுப் பயணிகள் என்றும் விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா பிளின்ட் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மேலும், விபத்தில் காயமடைந்த பயணிகள் அனைவரும் உள்ளூர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் உறுதிபடுத்தினார்.
விபத்தின் பின்னர் திங்கட்கிழமை விமான நிலையத்திலிருந்து புறப்படும் பெரும்பாலான விமானங்கள் தாமதமாக அல்லது இரத்து செய்யப்பட்டன.
புறப்பாடும் வருகையும் மாலை 5 மணிக்குப் பின்னர் மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் விமான நிலையம் தெரிவித்துள்ளது.
டெல்டா ஏர் லைன்ஸின் 4819 விமானம், வார இறுதியில் டொராண்டோ பகுதியைத் தாக்கிய குளிர்காலப் புயலைத் தொடர்ந்து வீசும் பனிக்கு மத்தியில் மினியாபோலிஸிலிருந்து வந்தது.
இந்த விமானத்தை அதன் துணை நிறுவனமான எண்டெவர் ஏர் இயக்குவதாக டெல்டா தெரிவித்துள்ளது.
இந்த விபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து உடனடி தகவல் இல்லை.
கனடா போக்குவரத்து ஆணையகம், இது குறித்த விசாரணைகளை தற்சமயம் ஆரம்பித்துள்ளது.
விசாரணைக்காக இரண்டு ஓடுபாதைகள் மூடப்பட்டிருக்கும் என்றும், விமான நிலையம் வழியாக பயணிக்கும் எவருக்கும் வரும் நாட்களில் தாமதம் ஏற்படும் என்றும் பிளின்ட் மேலும் கூறினார்.