“சிக்கலான மருத்துவ சூழ்நிலையை” சமாளிக்க போப் பிரான்சிஸின் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுக்கான சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் அவர் தேவைப்படும் வரை மருத்துவமனையில் இருப்பார் என்று வத்திக்கான் திங்கள்கிழமை (17) தெரிவித்துள்ளது.
88 வயதான கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் ஒரு வாரத்திற்கும் மேலாக சுவாச நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு ரோமில் அமைந்துள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (14) அனுமதிக்கப்பட்டார்.
இது கடந்த ஆண்டுகளில் அவரது தொடர்ச்சியான உடல் நிலைத் தொடர்பான அண்மைய பிரச்சினையாகும்.
அவரது உடல் நிலை குறித்து வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அண்மைய நாட்களிலும் இன்றும் (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் முடிவுகள் சுவாசக் குழாயின் பாலிமைக்ரோபியல் நோய்த்தொற்றை நிரூபித்துள்ளன, இது சிகிச்சையை மேலும் மாற்றியமைக்க வழிவகுத்தது” என்று ஒரு சுருக்கமாக சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பரிசுத்த தந்தை காய்ச்சல் இல்லாமல் உள்ளதாகவும், பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சையை தொடர்வதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் இருந்து, காசாவின் ஒரே கத்தோலிக்க திருச்சபைக்கு போப் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார் என்று என்கிளேவில் உள்ள உள்ளூர் பாதிரியார் தெரிவித்தார். அக்டோபர் 2023 இல் இஸ்ரேல் மற்றும் காஸாவில் போர் தொடங்கியதில் இருந்து திருச்சபையுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக போப் கூறியுள்ளார்.
போப், திங்கட்கிழமை மருத்துவமனையில் இருந்தபோது சில வேலைகளையும் வாசிப்பையும் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் 12 ஆண்டுகளில் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் 21 வயதில் அவரது நுரையீரல்களில் ஒரு பகுதி அகற்றல் உட்பட வாழ்நாள் முழுவதும் பல உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.
2023 மார்ச்சில் அவர் மூச்சுக்குழாய் ஒவ்வாமையுடன் மருத்துவமனையில் மூன்று இரவுகளைக் கழித்தார்.
அதே ஆண்டு ஜூன் மாதம் வயிற்று குடலிறக்கத்தை சரிசெய்ய மூன்று மணிநேர அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
மற்றொரு நோயின் காரணமாக, 2023 இல் COP28 காலநிலை உச்சிமாநாட்டிற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான தனது பயணத்தை இரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பரில், அவர் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் 21 புதிய கத்தோலிக்க கர்தினால்களை நிறுவும் விழாவிற்கு தலைமை தாங்கியபோது, அவரது கன்னத்தில் ஒரு பெரிய காயத்துடன் தோன்றினார்.
மிக அண்மைய சம்பவமாக ஜனவரியில் அவர் கீழே விழுந்து வலது கையில் காயம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.