சட்டவிரோதமான முறையில் பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்கு கடத்த முற்பட்ட வெளிநாட்டு பிரஜை, பெண் உட்பட மூவரை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனியான சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் துபாயிலிருந்து வந்த 51 வயதான இந்தியர் ஒருவர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில் கைது செய்யப்பட்டார்.
நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட 15,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் (75 அட்டைப் பெட்டிகள்) சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டன.
இன்று மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையின் போது, துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 21,200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் (106 அட்டைப்பெட்டிகள்) இளைஞன் ஒருவர் BIA வருகை முனையத்தில் கைது செய்யப்பட்டான்.
23 வயதான இவர் ரஸ்நாயக்கபுரவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், இன்று 46,800 வெளிநாட்டு சிகரெட்டுகளை (234 அட்டைப்பெட்டிகள்) துபாயில் இருந்து கடத்த முயன்றதற்காக பன்னிபிட்டியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவு இந்த மூன்று சம்பவங்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.